பெங்களூர்:தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் அதனை நிறைவேற்ற தயாராக இல்லை. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம் நடத்தி அடுத்தடுத்து தீவிர ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கடைசியாக சட்டமன்றத்தை கூட்டி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
அதன்படி இன்று கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. முதலில் சட்டமேலவைக் கூட்டம் நடைபெற்றது. விவாதத்தின்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற கருத்தையே பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும், தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் குறித்து முதலமைச்சர் சித்தராமையா பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தை எதிர்ப்பது கர்நாடகத்தின் நோக்கமல்ல. இருப்பிலும் போதிய மழை இல்லாததால் அணைகளில் தண்ணீர் இல்லை. எனவே, தவிர்க்க முடியாத காரணத்தினால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றார்.