புதுடெல்லி:டெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் கடந்த ஜூலை மாதம் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
சரவணனின் தந்தை கணேசன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது மகன் சரவணன் கொலை செய்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது மரணம் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல்களை டெல்லி போலீசிடம் கேட்டும் தரவில்லை.
இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரிகள் உண்மையை மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே போலீஸ் துணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைத்து ஐகோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், மனுதாரருக்கு சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை நகல்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவர் சரவணன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. டாக்டர் சுதிர் கே.குப்தா தலைமையிலான மருத்துவக்குழு வெளியிட்டுள்ள இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சரவணன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரவணனின் உடலில் யாரோ விஷ ஊசியை செலுத்தியிருக்க வேண்டும் என்றும், மருத்துவம் தெரிந்தவராலேயே ஊசியை செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த செயலை செய்தவர்கள் யார், கடைசியாக சரவணனின் அறையில் யார் சென்றார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.