புதுடெல்லி:காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது.
கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து, கர்நாடகாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே காவிரி மேற்பார்வைக்குழு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தினமும் 3000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என தெரிவித்தனர். இதனால் கர்நாடகம் கடும் அதிருப்தியில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது காவிரி மேற்பார்வைக்குழுவின் தீர்ப்பின்படி 3000 கன அடி தண்ணீர் போதாது என்றும், 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு செய்தது.
அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடக மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கே அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என வாதிட்டார்.
மேலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் மாதா மாதம் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தெளிவாக இல்லாததால் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது என்றும், தமிழகத்திற்குரிய தண்ணீரை திறக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உத்தரவிட்டனர்.