சென்னை:நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், நேற்று முன்தினம் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ராம்குமாரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நேற்று காலையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அதுவரை பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலையில் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. ஆனால் பிற்பகலில் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதற்காக டாக்டர்கள் குழுவும் நியமிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
டாக்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் ராம்குமாரின் பெற்றோர் மாலை 6 மணி வரையில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. இதனால் காலையில் தடைபட்ட பிரேத பரிசோதனை மாலையிலும் நடைபெறவில்லை.
இன்று காலை 10 மணிக்கு ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறை அருகில் உள்ள நுழைவு வாயில் இன்றும் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது.
ராம்குமாரின் தந்தை பரமசிவம் மற்றும் உறவினர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் யாரும் வரவில்லை.
இதன் காரணமாக இன்று 2-வது நாளாக ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும்,தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வ குமார், உதவி பேராசிரியர் மணிகண்டராஜா, ஸ்டேன்லி ஆஸ்பத்திரி அறுவை சிகிச்சை நிபுணர் பால சுப்பிரமணியம், டாக்டர் தினேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தயார் நிலையில் இருந்தனர். நீதிபதி தமிழ்செல்வி ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டீன் நாராயண பாபு ஆகியோரும் ஆஸ்பத்திரியில் காத்திருந்தனர்.
இந்நிலையில் பதட்டமான சூழ்நிலை உருவானதால் ஆஸ்பத்திரி முன்பு 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இன்றும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.