மெக்கா:இஸ்லாம் மார்க்கத்தின் புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்கு உலகம் முழுவதும் இருந்து புறப்பட்டுவந்த சுமார் 15 லட்சம் யாத்ரீகர்கள் இன்று மக்கா நகரில் இருந்து ஹஜ் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது மக்காவில் உள்ள பெரிய மசூதி வளாகத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்து மற்றும் சாத்தான் மீது கல்லெறியும் சம்பிரதாயத்தின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் யாத்ரீகர்கள் பலியானதுபோல் இந்த ஆண்டு அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்கும் பொருட்டு சவுதி அரசு பல்வேறுகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் மின்னியல் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ள அது உதவும்.