புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில், வியட்நாமுக்கு அவர் இன்று செல்கிறார்.
அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
வியட்நாம் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி நாளை சீனாவின் ஹேங்சூ நகருக்கு செல்கிறார். அங்கு மற்றும் 4 மற்றும் 5–ந் தேதிகளில், ஜி–20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதில் மோடி பங்கேற்கிறார்.
பயங்கரவாத இயக்கங்களுக்கான நிதி உதவியை கட்டுப்படுத்துதல், வரி ஏய்ப்பை தடுத்தல், முக்கிய மருந்து பொருட்களுக்கான சந்தை அனுமதி உள்ளிட்ட பிரச்சினைகளை மாநாட்டில் இந்தியா எழுப்பும் என்று தெரிகிறது. வரி ஏய்ப்பு பற்றிய தகவலை ஒவ்வொரு நாடும் தானாக முன்வந்து பகிர்ந்து கொள்வது, உலகளாவிய வரி சீர்திருத்தம், பருவநிலையை காக்க நிதி உதவி செய்வது, சர்வதேச பொருளாதார பின்னடைவை கட்டுப்படுத்துவது போன்றவை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
ஜி–20 மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார், இரு நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி 5–ந்தேதி இந்தியாவுக்கு திரும்புகிறார்.