சென்னை: நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமாரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
கொலை நடந்த போது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கேமராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ படத்துடன், ராம்குமாரின் படத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்காக மீண்டும் அதேபோன்ற வீடியோ பதிவு செய்ய அனுமதி கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் குருமூர்த்தி, ராமராஜ் ஆகியோர் ஆஜராகி, ‘வீடியோ படம் பிடிக்க கீழ் கோர்ட்டு வழங்கிய அனுமதி சட்டவிரோதமானது’ என்று வாதம் செய்தனர். இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 9-ந் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி பி.என்.பிரகாஷ் இன்று பிறப்பித்தார். ‘ராம்குமாரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க கீழ் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்கிறேன். அதற்கு பதில், புழல் சிறையில் ராம்குமாரை வீடியோ படம் மற்றும் புகைப்படம் எடுக்கவேண்டும். என்று நீதிபதி கூறியுள்ளார்.