புதுடெல்லி:ஜி.எஸ்.டி சட்டத் திருத்த மசோதா குறித்து மாநிலங்களையில் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலில் காங்கிரசின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் ஜி.எஸ்.டி மசோதாவை ஒரு போதும் எதிர்க்கவில்லை. குறைபாடுகள் உள்ளதாகவே கூறி வந்தோம். முந்தைய மசோதாவில் ஏராளமான குறைகள் இருந்ததால் அதனை ஏற்கவில்லை.
2014ல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது, அதனை விட குறைகள் நீக்கப்பட்ட சரியான மசோதாவை கொண்டு வர நினைத்தோம்.
எதிர்க்கட்சிகளுடன் ஆதரவுடன் ஜி.எஸ்.டி மசோதாவை நாங்கள் நிறைவேற்ற நினைத்தோம். ஆனால் தோல்வி அடைந்தோம்.
கடந்த 18 மாதங்களாக எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் அது தோல்வியில் அடைந்ததில் மகிழ்ச்சி.
மாநிலங்கள் 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அனுமதித்தால் அது பல வரிகளுக்கு வித்திடும்.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், தீவிரமான விவாதங்களின் அடிப்படையில் நிதி மந்திரி இந்த மசோதாவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். இது மத்திய மற்றும் மாநில நிதித்துறைகள் தொடர்பான பிரச்சனை மட்டும் அல்ல. நாட்டு மக்களின் பிரச்சனையும் கூட.
எனது கட்சியின் சார்பாக நான் கேட்டுக் கொள்வது, ஜி.எஸ்.டி 18 சதவீதத்திற்கும் மேல் இருக்கக் கூடாது. வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றம் கண்டிப்பாக பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.