சென்னை: ரஜினி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி, திரையரங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. இப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருவதாக கூறப்பட்டுவரும் இந்த வேளையில், ‘கபாலி’ ஒரு தோல்வி படம் என்று வைரமுத்து பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரமுத்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு விழாவில், நான் புரிந்துகொள்கிறேன் ஒவ்வொருவரையும் என்று ஆரம்பித்து, அரசியலை, விஞ்ஞானத்தை என்று ஒவ்வொன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வருகிறார். இறுதியில், ‘கபாலி’ தோல்வியையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று பேசுகிறார்.
பல கோடிகளை வசூல் செய்துவிட்டதாக கூறப்படும் ‘கபாலி’ படத்தை வைரமுத்து தோல்வி படம் என்று கூறும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வைரமுத்துவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில், ஒருதரப்பினர் வழக்கமாக ரஜினி படங்களுக்கு பாட்டு எழுதும் வைரமுத்து, ‘கபாலி’ படத்திற்கு ஒரு பாட்டுகூட எழுதவில்லை. தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்தான் வைரமுத்து இப்படி பேசியுள்ளார் என்று கூறுகின்றனர்.