அகமதாபாத்:குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடந்த ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி அவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்றிலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் அவர் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.